Sunday, 14 April 2019

வீடும் அதன் வாழ்வும்

மனிதனுடன் அதிகமாய்

அளாவுவதால் என்னவோ

வீடும் அதன் வாழ்வும்

பெரும்பாலும்

மனிதனை ஒத்தே

இருக்கிறது..

உதாரணமாய்..

புதிதாய் பிறந்த கட்டிடங்கள்

எல்லாம்

பெரும்பாலும்

சிறு பிள்ளையின்

வாசத்தை ஒத்தே

மனதில் படுகிறது..

பாதிச்சுவர் மட்டும் கட்டப்பட்ட

தன் வீடு தரும்

இளம் மணம்

எப்போதும்

தான் பெற்ற பிள்ளையைப்

போல அவ்வளவு

ஆனந்தமாய்

மணக்கிறது..

அதனால்தான்

என்னவோ

அதைப்

பிள்ளையைப் போல

அலங்கரித்து

அதற்கும் பேர் வைத்து

விழா எடுத்து

ஊர் முழுதும் தன்

இன்பத்தைப் பறை சாற்ற

மனம் கிடந்து துடிக்கிறது..

நாளடைவில்

நம்மைப் போன்றே

வயதாக ஆக

அக்கட்டிடமும்

ஏனோ

சாதாரண மனிதனைப்

போல்

கிளர்ச்சி குறைந்து

சில சமயம்

கேட்பாறற்றும் ஆகிறது ..

இருந்தும்

என் ஊர் செல்லும்

போதெல்லாம்

என் ஊரில் உள்ள

கிழட்டு வீட்டைக்

காணும் போதெல்லாம்

ஏனோ

என் பாட்டனும் அவன்

காட்டிய பாசமுமே

கண்ணை நனைக்கிறது..

அக்கிழட்டு வீடு ஏனோ

எனக்கு பாரமாய்த்

தெரியாமல்

நோய்வாய்ப்பட்ட

என் பாட்டன்

கிடப்பதைப் போன்றும்

கடைசியில்

அது இடியும் போது

வாழ்ந்து முடிந்த

என் பாட்டன்

எனை விட்டுச்

செல்வதைப் போன்றும்

மனம்

அழுது ஆர்ப்பரிக்கிறது..

ஆக..

உற்றுப் பார்த்தால்

வீடும்

நம்மைப் போன்றே

நம்முடன் பிறந்து

நம் உறவாய் வாழ்ந்து

பின்ஒரு நாள்

அதுவும்

நம்முடனே மடிகிறது ..

-சந்திரன்

No comments:

Post a Comment