Wednesday, 28 November 2018

ஆர்ப்பரிப்பு

உன்னை நான் பின்தொடர
உன் மீதான ஈர்ப்பே காரணம் ..
அதுவே ஆதிச்சுழி ..

அச்சுழி இல்லாமல் போனால்
உனை என்மனம்
எப்போதோ தொலைத்திருக்கும் ..

இப்போதும்
உனைக்காணும் கணம் யாவும்
அச்சுழி பெரும் இரைச்சலோடு
என்னுள் ஆர்ப்பரிக்கும்..

உனை காணும்
கணம் மட்டுமே
என்னுள் வரும்
ஒலி அது ..

நீ இல்லாமல் போனால்
நிச்சயம் என்னால்
அப்பேரிரைச்சலை
திரும்ப உருவாக்க முடியாது ..

காரணம்
அவ்விரைச்சலின்
ஆதி ஊற்று நீ ..

அதை
வேடிக்கை பார்க்கும்
வெறும் பார்வையாளனே நான் ..

- சந்திரன்.

Wednesday, 24 October 2018

நாளையின் புதிர்

நேற்றின்
இதுவரையின்
பிம்பம்
நாளையின்
மொத்தத்தையும்
எப்போதும்
புதிர் கொண்டதாகவே
வைத்து
அழகாக்குகிறது..

நேற்றின்
தழும்பும் வடுவும்
நாளையை
தளர்த்தியும்
நேற்றின்
கேளிக்கையும்
சிரிப்பும்
நாளையை
களிப்பாக்கியும்
நித்தமும்
நினைப்பாய்
அலைக்களிக்கிறது..

நானில்லா
நானாகும்
நாள் வரை
தினம் ஓர்
வண்ணம்
காட்டும்
இப்பயணம்
விடாது
பீடிக்கும் ஓர்
அனுபவம்.

-சந்திரன்

Monday, 22 October 2018

திருமண நாள்..

படித்துச் சலித்தேன்
எழுதித் திழைத்தேன்
ரசித்துக் கழித்தேன்
அலைந்து திரிந்தேன்

நீ இல்லா வெறுமையைக்
கொல்ல..

ஏதேதோ செய்தேன் நான்..

உன் வெறும் இருப்பே
இவை யாவும்
விடவும் மேலாய்
அர்த்தம் காட்டியது..

நீ இல்லா நான்
எனும் கணம்
ஏனோ
நான் இல்லா
நானாய்
சூனியமாக்கியது..

தாயின் வெறும்
இருப்பிற்காய்
ஏங்கும்
குழந்தை
போல்
வெறும்
உன் இருப்பே
எனை ஏனோ
எது குறித்தும்
சிந்திக்க
விடாமல்
அழகாய்
நிரப்பியது..

நீ என் பாதி
என இதுநாள்
காணும்
உரைத்துத்
திளைத்தவனுக்கு,
நீ என் ஆதி
எனும் தெளிவு
எங்கோ
தட்டியது..

வாழ்நாள்
முழுதும்
ஆர்ப்பரிக்கும்
காதலோடு

திருமண நாள் வாழ்த்துக்கள்..









Sunday, 9 September 2018

புத்தனாகும் எத்தனம்

வெண்ணிற பட்டுடுத்தும்
புத்தனாய்
பிறக்க தினமும்
எத்தனித்தாலும்

நிஜம் என்னவோ..

ஆணவம்
மிதக்கும்
அற்பனாகவோ

இல்லை

கோபம்
கொப்பளிக்கும்
அரக்கனாகவோ

இல்லை

பொய்கள்
பிதற்றும்
பித்தனாகவோ

இல்லை

குரூரம்
கொள்ளும்
சிறுநரியாகவோ

இல்லை

காமம்
கொப்பளிக்கும்
அரவமாகவோதான்

பெரும்பாலும் முடிகிறது..

பிரகஸ்பதி எனும்
கனவு
இச்சென்மம்
கூடியும்
எட்டாக்கனி தான்
போலும்..

-சந்திரன்

Sunday, 2 September 2018

மனம் எனும் கட்டுத்தறி

வண்ணங்களேயன்றி
வெறும் வெள்ளையும்
கருப்புமாய்
நெய்து கொண்டிருந்த
என் கட்டுத்தறி
உனைக் கண்டவுடன்
மட்டும் ஏனோ
ஜொலிக்கின்ற
பட்டாய் நெய்து
தள்ளுகிறது..

உன் ஜொலிப்பின்
பாதியையேனும்
அடைந்து விடுகின்ற
முனைப்பில்
அது
தங்க ஜரிகையையும்
தேவலோக
வண்ணத்தையும்
ஒருசேரக் கலந்து
இரவு பகலாய்
நெய்கிறது..

இருப்பினும்
பிரம்மன் நெய்த
பிரம்மாண்ட
ஜொலிப்பான
உனை
அடைய
இன்னும்
பலநூறு ஜென்ம
தவம் தேவை
எனப் புரியாமல்
பிரஞ்ஞையற்று
ஏனோ
பேதையாய்
நெய்கிறது
அப்பாவிக்
கட்டுத்தறி .. !!

Thursday, 9 August 2018

பாவ மன்னிப்பு

என்னதான்
முயன்றாலும்
மற்றவரின் கரையை
கை காட்டியும்,
கைகொட்டியும்
சிரிக்கும்
மனம்..
தன் மலத்தை
மட்டும்
ஏனோ
யாருமறியாமல்
மறைக்கவே
முயல்கிறது..

எப்போதும் அது
கரையை
ஒழிப்பதை விடுத்து,
கரையை மறைக்கவே
மெனக்கெடல்
கொள்கிறது..

குற்றத்தை
ஒப்பிட்டு
மன்னிப்பு கோரச்
சொன்னால்
அது
பள்ளி செல்லும்
குழந்தை போல
அடம் கொண்டு
தப்பிக்கத்தான்
முயல்கிறது..

பாவத்தை ஒப்பிட
நடுங்கும்
இதே மனம்,
பாவம் புரிகையில்
மட்டும்
ஏனோ
திமிரெடுத்த
நாயைப் போல
சர்வ அதிகாரமும
பெற்றதாய்
பீற்றிக்
கொள்கிறது..

ஒப்பிட்டு
மன்னிப்புக்
கோருதலென்பது
இச்சென்மத்தில்
நிகழவே
நிகழாத
காரியமா?..

ஒருவேளை
பாவமன்னிப்பு
கோருதல் தான்
இச்சென்மத்தின்
ஆகப் பெரும்
கடிதான
காரியமோ?..

Monday, 16 July 2018

Sunday, 15 July 2018

நிழலும் நிஜமும்

எக்கணமாகினும்

கண்முன் தோன்றும்
அழகை விடவும்
காணும் முன் அது கட்டும்
பிம்பம் தான்
அலாதிப் பேரழகு..

அசலும் பிம்பமும்
அருகிலிருக்கையில்
அசலை விடவும்
ஆயிரம் மடங்கு
வசீகரிம் கொண்டது
அதன் நிழல்..

கரும் இருட்டு
உறுத்தும் பயத்தை
விடவும் அதன்
நினைப்பும் நிழலும்
தரும் பயம் தான்
என்னவோ
பலகோடி மடங்காய்த்
தெரிகிறது..

காமத்தை விடவும்
கோடி மடங்கு
வீரியம் கொண்டது
அதைப்பற்றின
சிந்தனை எனும்
நிழல்..

அங்ஙணம்
மனம் முழுமையும்
பசையாய்ப் பரவிய
காம நிழலின்
மொத்த வெளிப்பாடுதான்
வெண்ணிற
சிறு துளி நிஜம்..

ஆக நிஜமான
நிஜத்தை விடவும்
நிஜமற்ற
நிழல்தான்
பூதாகரமானது
என்ற உண்மை
விளங்கினாலும்

மனம் என்னவோ
விடாப்பிடியாய்
நிழலைப் பற்றி
சிந்திக்கவே
நித்தமும் அலைகிறது.. :(

எனை மேய்க்கும் என்னவள்

நான் மாற்றோனோடு 

ஒத்திசையும்
மனம் வாய்த்தவனல்ல..

வெகுவெகு
சொற்பமே
நான்
சேர்த்த
நண்பர் கூட்டம்..

நான் சேர்ந்த
கானல் கூட்டமும்
இக்கால வாழ்க்கையின்
தேவையாய்ச்
சொல்லும்
நட்பிற்காய்ச்
சேர்த்தது..

ஓர் சிறு பொறி
ஓர் சிறு உறசலே
போதும்
நான் சேர்ந்த மொத்தக்
கூட்டத்தையும்
நானே தீயிட்டழிக்க..

எப்போது
எம்மனநிலையில்
நான்
எனும் கேள்வியே
இன்னும்
எனக்கு
விடையறியாப் புதிர்..

இப்புதிருக்கு
என்னை விட
மேலாய்
விடை தெரிந்ததாய்
நானறிந்த
ஒரே ஜீவன்
நீ..

இப்பைத்தியத்திற்கான
வைத்தியம் தெரிந்த
கை தேர்ந்த
மருத்துவத்தியும்
நீ ஒருத்தி தான்..



மனையாளின் பிறந்தநாள்

சட்டென பூத்த
பூ இல்லை தான்
நீ எனக்கு..

உன் வரவு
வெறும் மொட்டெனத்
தெரிந்தாலும் ,
மொட்டொன்று
பூவாகும் காலம் தான்
எத்தனை அழகு..

பல ஆயிரம்
அதிசயம் தரும்
வாழ்க்கையின்
அழகிற்கு எல்லாம்
உன் வரவு நிச்சயம்
ஒரு வைரக்கிரீடம் தான்..

சட்டென வெடித்தெளும்
எனக்கு
சற்றும் பொறுமையில்லாத
நீதான் என்னவோ
நின்று நிதானமாய் மாற்ற
தினம் தினம்
எத்தனிக்கிறாய்..

ஆயிரம் முறை
சண்டையிட்டாலும்,
அடுத்த நொடியே
எனை
அமைதியாக்கும்
அழகான
வஜ்ராயுதம் தான்
நீ எனக்கு..

நெருப்பு தான்
நானென்றாலும்
தங்கமாய்
அதில் உருகும்
வடிவான
சொக்கத் தங்கம் தான்
நீ எனக்கு...

என்றேனும்
ஒரு நாள்
நானும் புத்தனாவேன்..
அவ்வாாறெனை                           புத்தனாக்கும்                                        அரிதான                                    மந்திரச்சாவியும்                                                  நீ தான் நீ எனக்கு..

எழுத எழுத
ஆயிரம் இருந்தும்
எதனுள்ளும் புகாது
என்னை முழுதாய் நிரப்பிய
என் மனையாளுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..


மகளின் பிரிவு

அனேக சமயங்களில்
எல்லோரும் சொல்லும்
தொடுதிரை
எனக்கெனவோ
தொடவிடா சிறையாகவே
தெரியும்..

ஒவ்வொரு முறையும்
சிகப்பு பொத்தானை
அழுத்தி பேச்சை முடிக்கும் முன்
அவள் தரும்
கடைசி முத்தம் எனக்கென்னவோ
என் சிதிலை சிதைக்காமல்
ரத்தம் பீரிட வைக்கும்..

காதலியை அடையத்
துடிக்க அலையும்
வலியை விடவும்
ரண மோசமானது
தன் மகளை தொடவொணா
அடையும் வலி..

மா குறும்படம்

எச்சென்ம பாவமிது
இப்போது வந்தது கழுவறுக்க..

இருட்டறைந்த அந்நேரத்தில்..

கொலையா தற்கொலையா என
அசிரிரி பிடரியிலறைந்தது..

மரணம் எக்காளமிட்டபடி
என்னெதிரே கால் நீட்டி அமர்ந்து புன்முறுவியது ..

இம்முறை விழுங்க இயன்ற மூச்சு மறுமுறைக்கு இரைத்து நின்றது..

விடை இல்லா கேள்வியுடனும்
கொடுவாளுடனும் வேதாளம்
என் முதுகேறியது..

ஆம் பள்ளி சென்ற எம்மகள்
கர்ப்பமாய் வீடு திரும்பிய போது..

மழலை நெடி மறையா
அவள் வார்த்தையில்
அவளே சொல்ல
நான் கேட்டபோது..

என் செய்வதெனயறியாது
திக்கற்று நிற்கையில்
என் செய் என
ஒளி காட்டினாள் அவள்

க்ஷணத்தில் என்னுள்ளிறங்கி
என்மகளை காத்தாள் அவள்..

செயல் எனதெனினும்
அக்கணம் நான் முழு யட்சியே..
என் மகளும் அவ்வாறே அன்றெனை பார்த்திருப்பாள்..

கழுத்தருகே வந்த கொடுவாள் மாயமாய் மறைந்ததாய் நினைவு..

சிறு திரியாய் என் மகள் மீண்டும்
உயிர்பெற அவளே காரணம்..

அவதாரப்புருசன்


அவதாரப்புருசர்கள்
அற்பாயுள் கொண்டவரா
நீ சொல் நண்பா ..
அவதாரப்புருசர்கள்
அற்பாயுள் கொண்டவரா.

வரம் வாங்கி வந்ததாய்
நான் உணரும் வெகு சிலரும்,
வெகு வேகமாய் பிரிவதேனோ
நீ சொல் நண்பா ..
வெகு வேகமாய் பிரிவது தான் ஏனோ..

வழக்கத்திற்கொன்றான
துக்க நாள் இல்லை தான் நண்பா..
இது வழக்கத்திற்கொன்றான
துக்க நாள் இல்லை தான்..

திரும்பி வரா
தியானத்தில் நீ இருக்க,
கள்ளமில்லா சிரிப்போடு
ஓடும் உன் மகளிடம்
என் சொல்வாள் நண்பா..
உன் துணை
என் தான் செல்வாள்..

நன்கு யோசிக்கையில், வழக்கத்திற்கொன்றான
நண்பனும் நீ இல்லை தான்..

முதல் அடியிலேயே நாங்கள்
முழித்துக் களைத்திருக்க ..
சிரித்த படியே சரசரவென
ஏறிச் சென்றாய் நீ..

நீ செய்த சாகசம்
பார்த்தே
நானும் சாகசம்
செய்யத் துடித்தேன்..

அவிழ்க்காத புதிர் எதையும்
அனாசமாய்
அவிழ்த்து சிரித்தாய் நீ..

அதைக்கண்டு தான்
காலன் பயந்தானோ என்னவோ..
உனை வெல்ல வேறு வழி தெரியாமல், கோழையாய் உனைக் கொன்றொழித்தான்.

ஆயிரம் புதிர் போடும் வாழ்க்கை, எனைக்கேட்டால் உன்னிடம் சற்று பொறுத்திருக்கலாம் தான்..

அதனால் தான் கேட்டேன்..

அவதாரப்புருசர்கள் அற்பாயுள் கொண்டவரா சொல் நண்பா ..
அவதாரப்புருசர்கள் அற்பாயுள் கொண்டவரா.

அரக்கி

அழகின் அரக்கி நீ ..

அடங்கா ஆணவத்தின்
பேரழகு நீ..

கணப்பொழுதில் உயிர் பிரிக்கும்
ராஜ அரவம் நீ..

கொல்லும் தணலின் கொப்பளிக்கும்
வசீகரம் நீ..

யட்சியின் மகள் நீ..

சுடும் உஷ்ணத்தின் உத்தமம் நீ..

அடர் சூட்டில் தோகை விரிக்கும்
அன்னம் நீ..

கண்களால் கணை எய்யும்
குந்தவை நீ..

நெஞ்சைக் கோடிட்டுக் கிழிக்கும்
தெய்வ ராட்சசி நீ..

நீ ..நீ..
நித்தமும் ஆர்ப்பரிக்கும்
நீங்கிடா
வசியம் நீ..

குதிரை உந்தும் மனம்

ஓராயிரம் குதிரை உந்தும்
உடல்
எப்போதெத் திசை செல்லும்
என்பது யாருமறியா
அதிசயம்..

மனம் என்னும் பாகன்
மதிமயங்கும் கணமெங்கும்
தறிகெட்டுத் தரைதட்டி
நிற்கும் இப்
பயணம்..

சிற்சில சோகங்களும்
அற்பச்சிறு எண்ணங்களுமே
போதும்,
வலிமை வாய்ந்த
இக் குதிரைகளை
மழுங்கடித்துகச்
சிதறடிக்க..

சில சமயங்களில்
தெறிகெட்டோடும்
குதிரைகளை வெல்லும்
மனமென்னும் பாகனும் ,

பல சமயங்களில்
பாகனை தலைகீழ்
குப்புறத் தள்ளும்
வெறி கொண்ட குதிரைகளுமாய்
நீண்ட நெடியது
இப்பயணம்..

இவ்விருவரும் சிலாகித்து
ஒத்திசையும்
பேரதிசயம்
அவ்வப்போது நிகழும்
அனுபவம்..

எப்படி இருப்பினும்
கனல் குறையா,
தணலும்
தாகமும் தணியாத
குதிரை வாய்த்தலென்பது
ஓர் வரம்..

-சந்திரன்

பணம்

பணம்..

இது வெகு சாதாரணமாய்க்
கடந்து போகும்
சொல் அல்ல..
அற்பச் சாதாரணமாய்
உதாசீனப்படுத்தும்
வார்தையுமல்ல.

ஒருவனைக்
குரூரமாய்க் கொல்லாமல்,
இரத்தம் பீரிடும் சிதிலாய்
சிதைக்காமல்..
கொல்லும்,
சிதைக்கும்
பேராயுதம்..

இது இடும் சூத்திரத்தில்
மொத்தச் சூன்யமும்
உன் முன் நிற்கும்..

பரிகாசங்களும்
வசை வார்த்தைகளும்
உனை
விரட்டாமல் விரட்டும்,
இலகுவாய்ப்
பைத்தியமாக்கும்..

இருட்டறைந்த
அந்நிலையிலும்
ஓர் சிறு துளியாய்
யாரேனும் தரும்
கரிசணம்,
அது
சாகும் வரையிலும்
மறவாமல் நிற்கும்
தரிசனம்..

இலகுவான
ஈவிரக்கமற்ற
இக்காகிதம்
மனிதன்
கண்ட மிருகங்களில்
மிகக்
கொடூரமானது..

இன்று
நாவால் நக்கி
கொஞ்சி மகிழும்
நாயெனத்
தெரிந்தாலும்
இந்த மிருகத்தின்
மீதுள்ள குரூரமும்
அதன் மேல் கொண்ட
பயமும்
என்றும்
மாறாதது.

- சந்திரன்